தேவர் ஜெயந்திக்கு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்...

தேவர் குருபூஜைக்கு செல்லும் வழியில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். காலை முதலே அரசு சார்பில், அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
தொடர்ந்து பலரும் பசும்பொன் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சூழலில், தேவர் குருபூஜைக்கு செல்லும் வழியில் பார்த்திபனூர் சோதனைச்சாவடி அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் டயர் வெடித்து ஏடிஎஸ்பி சுகுமாறன் வாகனத்தின் மீது மோதியதில், சுகுமாறனின் கார் சாலை தடுப்பில் மோதி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த காவலர் முஜிபுர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.