இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!!
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றவுள்ளது. இந்த ஆலோசனையில் பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும் ,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது பற்றிய திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளது