72 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஓபிஎஸ்

 
ops

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் கொண்டு வந்த 72 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுடன் ஓபிஎஸ் பிறந்தநாள் கொண்டாடினார்.


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஜனவரி 14ஆம் தேதி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஓபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு  நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே அவரை சந்திக்க பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காத்திருந்தார். அப்போது தொண்டர்களை சந்திக்க வந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்று வருங்கால முதல்வர் மற்றும் அதிமுகவின் மூன்றாம் தலைவர் என கோஷமிட்டு வரவேற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் ஒரு சில தொண்டர்கள் செங்கோல், விநாயகர் சிலை, வெள்ளி வேல் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 5.5கிலோ எடையுள்ள வெள்ளி வேல் வழங்கி, 72கிலோ எடையுள்ள கேக் வெட்டிக் கொண்டாடினார். இதில் வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க அவரது இல்லத்திற்கு முன்பாக நின்று குத்தாட்டம் போட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.