ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் பொதுக்கூட்டம் - கோவை செல்வராஜ் தகவல்

வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி முதல் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவரது தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தனது பங்கிற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து இரு அணிகளும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியின் கோவை மாவட்ட செயலாளராக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து கோவை செல்வராஜ் அவிநாசி சாலையிலுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் படுதோல்வி அடைந்தது. கோவை முழுவதும் எனது தலைமையில் ஒவ்வொரு கிராமமும் சென்று, சைக்கிள் பேரணி நடத்தி கட்சியை பலப்படுத்துவோம். வருகிற செப்டம்பர் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வ.உ.சி., பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அ.தி.மு.க.,வே உண்மையானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது. வரும், 20ம் தேதிக்கு மேல், ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.