எனது புகைப்படத்தை அகற்றியதற்கு காலம் பதில் சொல்லும் - ஓ.பன்னீர்செல்வம்

 
op

அதிமுக அலுவலகத்தில் இருந்து தனது புகைப்படத்தை அகற்றியதற்கு காலம் பதில் சொல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் -ஈபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் வழிநடத்தப்பட்டு வந்தது.  தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வழக்கின் தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியுள்ளது.  அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இதனால் அரசியலில் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து ஓ .பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

admk

இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.  புதிய பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா , எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.  எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஒரு சில நாட்களிலேயே பன்னீர்செல்வம் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்து தனது புகைப்படம் அகற்றப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து தனது புகைப்படத்தை அகற்றியதற்கு காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.