தனி நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு

 
ops

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்றக் கோரிய விவகாரத்தில் தனி நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வமும்,  அவரது ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம்  தலையிட முடியாது.   சட்டப்படி பொதுக்குழுவினை நடத்திக் கொள்ளலாம்.  விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம்- வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் .  இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்.  அதுவும் வழக்கை இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து இந்த வழக்குகளை  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருந்தது. இந்த நிலையில் வைரமுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.  

high court

அந்த மனுவில்,   அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது.  அவருக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதுகுறித்து தலைமை நீதிபதி அளித்துள்ள பதிலில்,   அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலனை செய்தும்,  சம்பந்தப்பட்ட தனி நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.  வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.  இதனையடுத்து தற்போது  நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் தலைமை நீதிபதியிடம் முறையிட்டது,  நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனிநீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும்,  ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையில் செயல்பாடு உள்ளது என்றும், தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்று கூறினார்.  .அத்துடன்,  அதிமுக பொதுக்குழு வழக்கை நானே விசாரிப்பேன் எனவும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  திட்டவட்டமாக தெரிவித்தார்.  

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக தங்கள் முன் வாதிட விரும்புவதாகவும் கூறி, ஓ.பி.எஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.இதனையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‛தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுங்கள். மன்னிப்புக் கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ‛தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஓபிஎஸ் தரப்பில் கேட்டு சொல்வதாக கூறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஒத்திவைத்தார்.