ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

 
ops

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு வைக்க வேண்டும் என திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக நடத்திட ஏதுவாக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு காலம்காலமாக நடைபெற்று வந்த நிலையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்து ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது.

ops

இருப்பினும், 2009 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டாலும், 2009 ஆம் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதன் காரணமாக ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழ்நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த ஏதுவாக 07-01-2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த அறிவிக்கையினையும் உச்ச நீதிமன்றம் 12-01-2016 அன்று தடை செய்து தீர்ப்பளித்தது. தி.மு.க. அரசு அங்கம் வகித்த மத்திய அரசின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில், நடைபெற்றதையடுத்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் முழு ஒத்துழைப்புடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் துரிதமான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டு, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டது. இன்றளவிலும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்றால், அதற்குக் காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம்தான். இதன்மூலம் தமிழ்நாட்டின் கலாச்சார மரபுரிமையை நிலைநாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. இதற்கான சட்டமுன்வடிவை, முதலமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் முன்மொழிந்ததையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டம் நான் முதலமைச்சராக இருந்தபோது இயற்றப்பட்டதையும் எனது வாழ்நாளில் கிடைத்த வரப்பிரசாதமாக நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பினை இறைவன் வடிவில் எனக்கு வழங்கிய மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எனது நன்றியினை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

thammambatti jallikattu

மேற்படி சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு 23-11-2022 அன்று வந்தபோது, 2017 ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது என்றும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், “ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றிய தமிழக சட்டசபையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை 29-11-2022 அன்று உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. இந்த வழக்கின் முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமைந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே நிலவுகிறது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசு மற்றும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தை நிலைநிறுத்தும் வைையில், தலை சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு எடுத்து வைக்கவும், இந்திய அரசு தலைமை வழக்குரைஞர் மூலம் தமிழ்நாட்டிற்கு சாதகமான, வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் ஆக்கப்பூர்வமான, துரிதமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.