காசி தமிழ் சங்கமம் விழா வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க வாழ்த்துக்கள் - ஓபிஎஸ்

 
ops

பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்படும் 'காசி தமிழ் சங்கமம்' விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், இன்று உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடக்க உள்ள "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியை பிரதமர் துவக்கி வைக்க வருவது தமிழ் மொழியின் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும் அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டினை, மாறாப் பற்றினை நமக்கு உணர்த்துகிறது. இயல், இசை, நாடகம் என முப்பரிமாணங்களைக் கொண்ட முத்தமிழை உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வரும் பிரதமருக்கு தமிழ் மக்களின் சார்பாக, அ.தி.மு.க.வின் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரால் இன்று துவக்கி வைக்கப்படும் 'காசி தமிழ் சங்கமம்' விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.