தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு மூடு விழா நடத்தும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்

 
Ops

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்போம்; அவர்களின் நலனுக்காக 'வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை' என்ற ஒரு புதிய துறையை உருவாக்குவோம்; அவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்விற்காக துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதையும், அவர்கள் வசித்து வரும் இடங்களை காலி செய்யச் சொல்வதையும் பார்க்கும்போது "படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான நடவடிக்கைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதை தி.மு.க. அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அனைத்துப் பணிகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 'விடியலை நோக்கி' என்று சொல்லிவிட்டு, 'விரக்தியை நோக்கி' அனைத்துத் தரப்பு மக்களையும் தி.மு.க. அரசு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. இது 'திராவிட மாடல்' அரசு அல்ல. ‘வெறுப்பு மாடல்' அரசு.1964 ஆம் ஆண்டைய இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான், 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் துவக்கப்பட்டது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், தேயிலைத் தோட்டங்களில் அவர்களுக்கு வசிக்க இருப்பிடமும் வழங்கப்பட்டது. தற்போது, இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் சுமார் 4,053 ஹெக்டேர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த 4,053 ஹெக்டேரில், 2,152 ஹெக்டேர் நிலப்பரப்பினை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு அண்மையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இதன் விளைவாக வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலுள்ள ஏழு பிரிவுகள் மூடும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் நிலைமை உருவாகி உள்ளதாகவும், ஓய்வூதியப் பலன்களை அளிக்கப்படுவதற்கு முன்பே வீடுகளை காலி செய்து தருமாறு தோட்டத் தொழிலாளர்களை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ops

மேற்படி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய வனத் துறை அமைச்சரோ தொழிலாளர்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்துள்ளார். TANTEA நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு வருவதாகவும், ஆள் பற்றாக்குறை இருப்பதாகவும், UPASI வரையறைப்படி 4,053 ஹெக்டேர் நிலப்பரப்புடைய TANTEA நிறுவனத்தை பராமரிக்க 7,094 தொழிலாளர்கள் தேவை என்றும், ஆனால் தற்போது 3,319 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறையிடம் ஒப்படைப்பதன் மூலம் TANTEA நிறுவனத்தின் உற்பத்தித் திறன் உயரும் என்றும், நிறுவனத்தின் நிதிச் சுமை குறையும் என்றும், வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவுகளில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் வேறு பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் அல்லது விருப்ப ஓய்வு திட்டத்தில் அனுப்பப்படுவார்கள் என்றும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வனத் துறைக்கு அளிக்கப்படும் 2,152 ஹெக்டேர் நிலத்தில் தமிழ்நாடு பசுமை இயக்க முயற்சியின்கீழ் புல் நாற்றுகள் மற்றும் உள்நாட்டு மரங்கள் நடப்பட்டு அந்தப் பகுதி இயற்கை வனமாக மேம்படுத்தப்படும் என்றும் கூறி இருக்கிறார். மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்களின் இந்தக் கூற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதனை இலாபத்தில் இயங்க வைப்பதுதான் ஓர் அரசினுடைய நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டு. இதைச் செய்யாமல், மேற்படி நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு ஆணை பிறப்பிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாகும். TANTEA நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணிவழங்க வேண்டுமென்றும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ள சூழ்நிலையில், ஆள் பற்றாக்குறை என்று சொல்வது ஏற்புடையதல்ல.

வனத் துறை அமைச்சர் அவர்களின் கூற்றினை உற்றுநோக்கினால், தொழிலாளர்களுக்கு சாதகமாக ஒரு கூற்றையும் அவர் கூறவில்லை என்பதும், விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது உறுதி என்பதும் தெளிவாகிறது. நிரந்தரத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை உறுதிப்படுத்தும் அமைச்சர் அவர்கள், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அதே சமயத்தில், தற்காலிகத் தொழிலாளர்களை பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு தொந்தரவு கொடுப்பதைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாய் திறக்காதது அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் TANTEA நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒரு வேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கேயே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் பொருத்தமாக இருக்கும். இதைவிட்டு விட்டு, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம். இதனை
ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, TANTEA நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.