நவம்பர்- 1 : தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

 
gk

நவம்பர் 1 இன்றைய தினம் தமிழ்நாடு நாள்.   இதுகுறித்து,  மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம் தேவை. அனைவருக்கும் உரிய சமூகநீதி, ஆற்று நீர் உரிமை, தரமான கல்வி,  தரமான மருத்துவம், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் போக்க, தமிழ் நாட்டின் உரிமை உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி காண இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி .    

அவர் மேலும் தமிழ்நாடு தினம் குறித்து, 

           "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்     
             தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்   
             தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு     
             சக்தி பிறக்குது மூச்சினிலே...         
             வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து     
             வான்புகழ்  கொண்ட தமிழ்நாடு”
    1956 நவம்பர் 1ல்  மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது முதல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நவம்பர் 1ஐ அந்தந்த மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.  ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்படவில்லை. நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை சட்டமன்றத்தில் நானும் வலியுறுத்தி வாதாடினேன். ஆனால் கடந்த 2019 ஆண்டு நவம்பர் 1 முதல் தமிழ்நாடு நாள் கொண்டாட  அறிவிக்கப்பட்டது. வரவேற்புக்குரியது. இன்று நவம்பர் 1 தமிழ் நாடு நாள் அனைவரும் கொண்டாடுவோம்.       

gk
         
          மாநிலங்கள் மறு சீரமைப்பு சட்டத்தின்படி 1956 நவம்பர் 1 (முதல் தேதி) மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டுக்கு பேரிழப்புதான் ஏற்பட்டுள்ளது.                  

           1956 நவம்பர் 1 ல் பிரிக்கப்பட்டபோது  அன்றைய மதராஸ் மாகாணத் (தமிழ்நாடு) தில் இருந்த தமிழர்கள் வாழும் பகுதிகளான  தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுங்காடு, பாலக்காடு ஆகிய பகுதிகள் கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மதறாஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்த தமிழர்கள் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி போன்ற பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. அதேபோல் பெங்களூரு, கோலார் தங்க வயல், கொள்ளேகால் போன்ற பகுதிகள் மைசூர் மாகாணத்(கர்நாடகா)துடன் இணைக்கப்பட்டன.  

       இதனால் தமிழர்கள் வாழும் பகுதிகள் மதராஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்து பிரித்து எடுத்தது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாகும். கன்னியாகுமரிப் பகுதியும் திருத்தணி பகுதியும் மதராஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்து பிரிக்கக் கூடாது என போராடியவர்கள் மார்சல் நேசமணி, ம.பொ.சிவஞானம், விநாயகம் ஆகியோர்.  
 
        நவம்பர் 1 இன்று தமிழ்நாடு தினம் அனைவரும் கொண்டாடுவோம். மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், தமிழ்நாட்டின் உரிமைகள், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய உரிய சமூகநீதி, நாட்டின் சொத்தான அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மருத்துவ வசதி, ஆற்று நீர் உரிமை உள்ளிட்டவற்றை காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.