ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை..- பாமக திட்டவட்டம்..

 
anbumani

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என்று பாமக அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு  வருகிற  பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.   ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரரும்,  ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் போட்டியிடுகிறார்.  அதேபோல், அதிமுகவின் இரண்டு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

election

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாமக  அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று  ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் பல முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும்,   இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ramadoss

இடைத்தேர்தலே தேவையில்லை என்பது தான்  பாமகவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ஒரு எம்.எல்.ஏ காலமானால் அவர் சார்ந்த கட்சிக்கு அந்த இடத்தை ஒதுக்கி விட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை என்று கூறிய  அன்புமணி ராமதாஸ்,  இடைத்தேர்தல் என்பதே மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்தான் என்றும்  விமர்சித்துள்ளார். பாமகவின் ஆதரவை கூற இருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில்,  யாருக்கும் ஆதரவு இல்லை என்று அன்புமணி திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.