வடகிழக்கு பருவமழை : இதுவரை 23 பேர் உயிரிழப்பு..

 
 வடகிழக்கு பருவமழை : இதுவரை 23 பேர் உயிரிழப்பு..


வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (55.96 மி.மீ.) பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில்,  இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக  18 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது.  101 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக 56 மரங்கள் விழுந்துள்ளன. இவற்றில் 54 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 2 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

* மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 168 நீர் இறைப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* 191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 நிவாரண மையங்களில் 120 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை

* மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 25,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

* மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

மாநில அரசு அவசர கட்டுப்பாட்டு மையம்

* இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 336 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 207 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 129 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 184 தொலைபேசி அழைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 49 அழைப்புகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

* இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.98 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 642 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 233 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.76 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 1310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.