தீப்பெட்டி தொழிலுக்கு இடையூறு.. - நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் உறுதி..

 
நிர்மலா சீதாராமன்

சிறு தொழிலான தீப்பெட்டி தொழிலுக்கு "சிகரெட் லைட்டர்" இடையூறு செய்வதாக எழும் புகார் மீது  நடவடிக்கை  எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மாநாடு டெல்லியில்  நடைபெற்றது.  தீப்பெட்டிக்கான  ஜி.எஸ்.டி. வரி 12 %   குறைக்கப்பட்டதற்கு  நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,  நடத்தப்பட்ட  இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தன் மனைவியுடன் மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் நிர்மலா சீதாராமனைபாராட்டி பேசியதோடு, தீப்பெட்டி தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளையும் விளக்கினார்.

தீப்பெட்டி

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் ,  “எனக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு மாநாடு நடத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நானே கோவில்பட்டிக்கு வந்து தீப்பெட்டி தொழிலை பார்வையிட்டு நிர்வாகிகளை சந்திக்கலாம் என்று இருந்தேன். ஆனால் என்னை அங்கு வரவிடாமல் இங்கு வந்து வாழ்த்தி விட்டீர்கள். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தென் மாவட்ட மக்கள் படும் கஷ்டங்களை நான் அறிவேன். அங்கு மழை பெய்யாவிட்டால் என்ன நிலைமை இருக்கும் என்பது எனக்கு தெரியும். சிவப்பு நிறமாக வறண்டு கிடக்கும் மண்ணில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல சிறு தொழிலை தொடங்கினார்கள்.  

 இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. பட்டாசு தொழிலை பொறுத்தவரை பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதற்கான ஆராய்ச்சி, அதற்கான மூலதனம், அதையெல்லாம் செய்யக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டி உள்ளது. எனவே  எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுத்தால் தான் அதில் தீர்வு காண முடியும்.  தீப்பெட்டி தொழிலை பொறுத்தவரை முன்பு உலக அளவில் முன்னணி நாடாக இருந்த ஸ்வீடன் இன்று 15 சதவீதமே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் உலகில் தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

வாங்குன கடனுக்கு வட்டி மட்டும் ஒரு மாதம் தள்ளுபடி! அசல மறக்காம குடுத்துடுங்க- நிர்மலா சீதாராமன் 

 நல்ல தரமான தீப்பெட்டியாக இருப்பதால்தான் உலக அளவில் அதற்கு சந்தை கிடைக்கிறது. தீப்பெட்டி தொழிலில் சிகரெட் லைட்டர் மூலம் அந்த தொழிலுக்கு இடையூறு இருப்பதாக என்னிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயலுடன்  கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுத்தால் பாதிப்பு இல்லாமல் நடக்குமோ அதற்கான முயற்சிகளை எடுக்கிறேன்.  ஊதுபத்தி தொழிலுக்கான மூங்கில் குச்சிகள் வடகிழக்கு இந்தியாவிலேயே நிறைய கிடைப்பதாக பிரதமரே சொல்லி இருக்கிறார். எனவே அதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்காது என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்..