ரூ 29.75 கோடி செலவில் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு!

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

tn

அந்த வகையில், உடுமலைப்பேட்டையில் 5.56 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தங்கும் விடுதி;நாகர்கோவில் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம்: விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதியதொழிற்பிரிவிற்கு 2.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம்;திருச்சிராப்பள்ளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம்;கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாதிரி தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி அறைகள், நூலகம், பணியமர்த்தும் அலுவலகம் ஆகிய கட்டடங்கள்,சென்னை - கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 3.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான தேசிய தொழில்நெறி சேவை மையக் கட்டடங்கள்;மதுரை (மகளிர்), தூத்துக்குடி, நாகலாபுரம், நாமக்கல், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 14.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்கள்; என மொத்தம் 29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

govt

இந்த நிகழ்ச்சியில்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசீமுத்தின், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.