சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புதிய திட்டங்கள்!!

 
ttn

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புதிய திட்டங்களை மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (16.9.2022) மதுரையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட இருக்கும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கி, தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

தொழில்முனைவோர் மற்றும் வங்கிகளுக்கான விருதுகள்

tn

தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வங்கிகளையும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி வருகிறது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் விவரங்கள்:

சிறந்த தொழில் முனைவோருக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்திற்கும்; வேளாண் சார்ந்த தொழில்களுக்கான விருது திருப்பத்தூர் மாவட்டம், ப்ரெஸ்ரா பிக்ல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும்; தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், ரமேஷ் ப்ளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும்; சிறந்த மகளிர் தொழில்முனைவோருக்கான விருது செங்கல்பட்டு மாவட்டம், ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ் நிறுவனத்திற்கும்; சிறப்புப் பிரிவினருக்கான விருது புதுக்கோட்டை மாவட்டம், பிரபு இண்டஸ்ட்ரியல் கேஸ்சஸ் நிறுவனத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு விருது

tn

முதல் இடத்திற்கான விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கான விருதினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், மூன்றாம் இடத்திற்கான விருதினை பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். வங்கிக்கடனுக்கான சொத்துப் பிணைய உரிமைப்பத்திரம் பதிவு செய்திட ஆன்லைன் வசதிதற்போதுள்ள நடைமுறைப்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும் பொழுது, அந்த சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (M.O.D. - Memorandum of Deposit of Title Deed and Equitable Mortgage) பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் உரிமையாளரும் வங்கி மேலாளரும் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரயம் ஏற்பட்டு கடன் பெறுவது தாமதமாகிறது. கடன் திருப்பி செலுத்தியபின் அதேபோல் M.O.D. பதிவு செய்ததை இரத்து செய்து இரசீது பெறுவதற்கும் வங்கி மேலாளர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுகிறது.

எனவே, இந்த காலவிரயத்தை தவிர்க்கும் நோக்கில், தொழில் நிறுவனங்கள், வீட்டுக்கடன் பெறுவோர், விவசாயக்கடன் பெறும் விவசாயிகள் என ஆண்டொன்றுக்கு சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் பயனாளிகள் பயனடையும் வகையில், சொத்தின் மீது கடன் பெறுவதற்கான, உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (Memorandum of Deposit of Title Deed and Equitable Mortgage) பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் வங்கிகளிலிருந்தே ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்திடும் வசதியினையும், கடன் திருப்பி செலுத்தியபின் பதிவு செய்ததை ஆன்லைன் மூலமே இரத்து செய்து இரசீது பெறுவதற்கான வசதியினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், "தமிழ்நாடு பதிவுச் சட்ட திருத்தம்" செய்து அதற்கான ஆன்லைன் வசதியும், வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும். இக்குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக, ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 20 குறுங்குழுமங்கள் அமைக்கப்படும் என்று 2022-23ஆம் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஏற்கனவே, நான்கு குழுமங்கள் ரூ.32.98 கோடி அரசு மானியத்துடன் ரூ.44.06 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று, மதுரை மாவட்டம், விளாச்சேரியில் ரூ.3.63 கோடி அரசு மானியத்துடன் ரூ.4.03 கோடி திட்ட மதிப்பீட்டில் பொம்மைக் குழுமம், தூத்துக்குடியில் 100 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ.2.02 கோடி திட்டமதிப்பீட்டில் ஆகாயத்தாமரைக் குழுமம், விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் ரூ.3.40 கோடி அரசு மானியத்துடன் ரூ.3.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மகளிர் நெசவுக் குழுமம், ஆகிய மூன்று குறுங்குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.

சிட்கோ நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகள் தொடக்கம்

tn

சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு, விற்பனைபத்திரம் பெறுதல் உள்ளிட்ட 12 சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கான வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுவசதிக் கட்டடங்கள் திறப்பு

கரூர் மாவட்டம், புஞ்சை காளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடி செலவிலும், இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனையுடன் உருவாக்கிட "பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்" எனும் புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.