சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும்! அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 
Highcourt

சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில் அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சீமைக் கருவேல மரத்தினால் வாழ்ந்த தலைமுறை உண்டு தெரியுமா? – பாமரன் கருத்து

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்  விசாரணை நடைபெற்றுவருகிறது.வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வனப்பகுதியில், 1,325 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், நபார்டு திட்டத்தின் கீழ் அவற்றை அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 281 ஹெக்டேர் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில்  ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் செலவு செய்து, மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்த   மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாக மாவட்டம் தோறும்  குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இப்பணியை  பசுமை  தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் ஒரு லட்சத்து 19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களில்   2750 ஹெக்டேர் பரப்பில் அமட்டும் அகற்றப்பட்டுள்ளதால், மீதமுள்ள பரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.