சைதை சாதிக் சர்ச்சை பேச்சு விவகாரம் - டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

 
saidai sadiq

பாஜக கட்சியை சேர்ந்த நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய, திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளித்தனர்.  இதை தொடர்ந்து நடிகைகள் மற்றும் பெண்களைப் பற்றி இழிவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இதேபோல் நடிகை குஷ்பு  டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 

dgp sylendra babu

இந்நிலையில், திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், சைதை சாதிக்கின் பேச்சு இந்திய தண்டனை சட்டம் 509-ன் படி குற்றமாகும். சொல், செயல், சைகை என எந்த வகையிலும் பெண்களின் நடத்தையை இழிவுப்படுத்தும் வகையில்  செயல்படுவது மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும். எனவே சைதை சாதிக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.