சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

 
சிறுவர் சீர்திருத்த பள்ளி

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் ஐந்து மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீ (17) என்கிற சிறுவன் கடந்த டிசம்பர் 30 ம் தேதி சீர்திருத்தப்பள்ளி காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர் மோகன், காவலர்கள் சரண்ராஜ், சந்திரபாபு, விஜயகுமார், வித்யாசாகர் மற்றும் முடி திருத்துபவர் ஆனஸ்ட்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

இந்நிலையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.  இந்த விசாரணையில், சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள், பணியாளர்கள், 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், காவல்துறையினர், கோகுல்ஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் என இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் சுமார் 5-மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.