சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்- மோடி

 
Modi

ரஷ்யாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் உக்ரைன் போரால் ரத்து செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவில் நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு முடிவு செய்தது. தமிழ்நாடு அரசின் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க மாம்மல்புரத்தில் செஸ் ஒலிம்பியாட்ட நடத்துவதற்கு நான்கே மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. 187 நாடுகளில் இருந்து சுமார் இரண்டாயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதனால் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மாலையில் இருந்தே விழா அரங்கிற்கு வரத் தொடங்கிய சர்வதேச செஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Image

செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க குஜாரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து பின்னர் சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா மேடைக்கு வந்த பிரதமரை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடிவிலான சிலையை நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார். இதையடுத்து நாட்டின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். பின்னர் முதலமைச்சரிடம் இருந்து ஒலிம்பியாட் ஜோதியை பெற்றுக்கொண்ட பிரதமர் பின்னர் இந்தியாவின் இளம் செஸ் வீரர்களிடம் வழங்கி போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் பிரதமர் மோடி மேடையில் உரையாற்றிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்!" என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.