'ரெட் ஜெயண்ட் 'என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? திருமாவுக்கு பாஜக கேள்வி

 
narayanan thirupathi

எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது. இது தொழில் போட்டி மட்டுமல்ல, தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுகிற மோசமான அணுகுமுறை. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்துவருகிறது. யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் பேசுகிறேன்.

இது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் மிக மோசமான அணுகுமுறை. எல்லாவற்றையிலும் தமிழ்நாடு பிறருக்கு முன்னோடியாக இருக்கிறது. சினிமாவுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் பங்கு உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். சினிமாவை வருமானத்துக்கு மட்டுமல்லாமல் கொள்கைகளுக்காகவும் பயன்படுத்தினார்கள்” என பேசினார்.

இதற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது?’- திருமாவளாவன் 'ரெட் ஜெயண்ட் 'என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்ல்லையா? மிடுக்கில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.