நளினி கொலைகாரி! அவரால் எத்தனையோ பேர் பூ வைக்கும் நிலையை இழந்திருக்கிறார்கள்! அனுசியா டெய்சி எர்னஸ்ட் ஆவேசம்

 
co

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரும் விடுதலை ஆகி இருக்கிறார்கள்.  பேரறிவாளன் முன்னதாக விடுதலையாக இருந்த நிலையில் மீதமுள்ள நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது . 

இந்த நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரியும்,  ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவருமான அனுசுயா டெய்சி எர்னெஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். 

na

அப்போது பேசிய அனுசுயா,  ’’ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது நான் பாதுகாப்பு பணியில் இருந்தேன்.  அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என் விரல்கள் துண்டிக்கப்பட்டன  உடல் முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டேன்’’ என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய அனுசுயா,   ’’நான் குற்றவாளிகளை நேரில் பார்த்தேன் . அதனால் தான் நளினி உள்ளிட்ட ஆறு பேர் தண்டனை பெற்றார்கள். ஆனால்,  குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்கள் மூலம் விடுதலையும் ஆகிவிட்டார்கள். 

 நளினி என்னை பார்த்ததே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.  போலீஸ்  உதவியுடன் தான் என்னை அடையாளம் காட்டினார் என்று பேட்டியளிக்கிறார்.  என்னுடைய சாட்சியை வைத்துக்கொண்டு மட்டும் நளினியை கைது செய்யவில்லை.  தண்டனை கொடுக்கவில்லை.  ஆயிரத்திற்கு மேற்பட்ட சாட்சிகளை வைத்து தான் தண்டனை கொடுத்தார்கள். 

 நான் பொய் சாட்சி என்றால் அப்போது நீதிமன்றம் பொய் சாட்சிகளை வைத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டதா என்ன? என்று ஆவேசப்பட்டார்.

nm

 குண்டு வெடிப்பின் போது நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லை.  இந்திரா காந்தி சிலை அருகில் தான் இருந்தேன் என்று பொய்யாக சொல்கிறார் நளினி. அன்றைக்கு வெளிவந்த பத்திரிகையில் அவர் கூட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது . முருகன் என்னுடைய கணவர் என்று சொல்கிறார்.  முருகன் என்பவர் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்.  அப்படி என்றால் விடுதலைப்புலிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் நளினியா?

 முருகன் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர் என்றால் அந்த அமைப்பின் கொள்கைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது.  அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் நளினி எப்போது திருமணம் செய்து கொண்டார்?  எப்படி கர்ப்பமானார்? என்பதை தெளிவுபடுத்தவே இல்லை . பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டு வருகிறார் நளினி என்றார்.

நளினி விடுதலை செய்யப்பட்டு வெளியே வரும்போது பூ வைத்துக் கொண்டு வந்தார்.  ஆனால் அவரால் எத்தனையோ பேர் பூ வைக்கும் நிலையை இழந்து இருக்கிறார்கள்.  நளினி ஒரு கொலைகாரி, துரோகி.   இப்போதாவது நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.