விவசாயிகளிடம் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி - முதல்வருக்கு அன்புமணி கடிதம்!!

 
pmk

என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதையும், வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதையும் முதலமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள். என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத் தர உழவர்கள் விரும்பவில்லை. என்.எல்.சி. தரப்பிலும், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட, அவை எதுவும் வெற்றிபெறவில்லை. நிலங்களை அளப்பதற்காக சென்ற என்.எல்.சி. மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடித்ததில் இருந்தே அவர்களின் உணர்வுகளை அறியலாம்.

tn

இத்தகைய சூழலில், என்.எல்.சி.க்கு நிலம் வழங்க பொதுமக்கள் தாமாக முன்வருவதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் என்.எல்.சி.யும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சிகளை தங்களின் அமைச்சரவையில் வேளாண்அமைச்சராக பணியாற்றி வரும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களே முன்னின்று நடத்தி வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், என்.எல்.சி.க்கு பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிலம் வழங்கியதாகவும், அவ்வாறு நிலம் வழங்கியவர்களில்10 பேருக்கு என்.எல்.சி. பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தங்களுக்குச் சாதகமாக செயல்படும் சிலரை வைத்துக் கொண்டு இதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது நியாயமற்றதாகும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தாங்கள் பதவியேற்ற பின்னர், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் முரணாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களும், கடலூர் மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியன் அவர்களும் என்.எல்.சி. நிறுவனத்தின் முகவர்களாக செயல்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களை கையகப்படுத்தி, அந்த நிறுவனத்திற்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்? உழவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக உறுதியேற்றுக் கொண்ட அமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், வாழ்வாதாரமாகத் திகழும் நிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ் என்.எல்.சி. நிறுவனம், அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியும் தொலைவில் என்.எல்.சி நிறுவனம் தனியார்மயமாக்கப் படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்திற்கு உழவர்களின் நிலங்களை பறித்துத் தருவது நியாயமல்ல.

anbumani

தமிழ்நாட்டில் 2040ஆம் ஆண்டுக்குள் நிகரச் சுழிய கரிம உமிழ்வு (Net Zero Carbon Emissions)  நிலை ஏற்படுத்தப்படும் என்று தாங்களே அறிவித்திருக்கிறீர்கள். தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பசுமை காலநிலை இயக்கத்தின் (Tamil Nadu Green Climate Mission) ஆவணத்திலும் இந்த இலக்கு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள தாவரங்கள் எந்த அளவுக்கு கரிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளுமோ, அந்த அளவுக்குள்  கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக படிம எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதல், நிலக்கரி சுரங்களை மூடுதல், நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.ஆனால், அதற்கு முரணாக புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதும், அனல்மின்நிலையங்களை அமைப்பதும் எந்த வகையில் சரியாகும். தங்களின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிராக தங்களின் அமைச்சரே செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தங்களை அவமதிக்கும் செயல் ஆகும்.மீண்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.  என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. அங்கு நெல், கரும்பு, வாழை ஆகியவை மட்டுமின்றி, முட்டைக் கோஸ் போன்ற தோட்டக்கலை பயிர்களும் விளைகின்றன. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அத்தகைய வளம் மிக்க நிலங்கள் என்.எல்.சி நிறுவனத்தால் அபகரிக்கப்படாமல் தடுக்க வேண்டியது தங்களின் கடமை.

இரண்டாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தபடவில்லை. அந்த நிலங்களில் இருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். இத்தகைய சூழலில் என்.எல்.சிக்கு அவசரம், அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை எங்கிருந்து எழுகிறது? வேளாண் வளர்ச்சி, உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய வேளாண்துறை அமைச்சர், அந்த பணிகளை கைவிட்டு, என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்தித் தரும் முகவரைப் போல செயல்பட வேண்டிய தேவை என்ன? என்பதே மக்களின் வினா.கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப் படுத்தப்படுவதை எதிர்த்து உழவர்கள் போராட்டம் நடத்திய போது, அந்தப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்தீர்கள். அது பாராட்டத் தக்க நடவடிக்கை. அன்னூருக்கு வழங்கப்பட்ட நீதியை கடலூருக்கும் வழங்க வேண்டும்; என்.எல்.சி நிறுவனத்திற்காக ஒரு சென்ட் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தாங்கள் அறிவிக்க வேண்டும் என்பதே கடலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.அதுமட்டுமின்றி, என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் கிடையாது; தீமைகள் தான் அதிகம். என்.எல்.சிக்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000  குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. அவர்களில் எவரும் இப்போது பணியில் இல்லை. அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.மற்றொருபுறம் என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது. வெள்ளக்காலங்களில் என்.எல்.சி. நிறுவனம் எந்த சமூகப்பொறுப்பும் இல்லாமல் அதன் சுரங்கங்களில் உள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வெளியேற்றுகிறது. அதனால், வெள்ளம் அதிகரித்து, மிக அதிக அளவில் உயிர் சேதமும், பயிர் சேதமும் ஏற்படுகிறது.

stalin

நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சல்பர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்கள்,  நிலக்கரி துகள் ஆகியவை காற்றில் பரவுவதால் காற்று மாசடைந்து ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் நோய் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

காலநிலை மாற்றத்தை உருவாக்கும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதற்கு முதல் காரணமாக இருப்பவை நிலக்கரி சுரங்கங்களும், அனல்மின் நிலையங்களும் தான். உலகின் ஒட்டுமொத்த கரியமிலவாயு வெளியேற்றத்தில் 36% அளவுக்கு இவையே காரணம். புவிவெப்பமயமாதலுக்கு   என்.எல்.சி பெருமளவில் பங்களிக்கிறது. அதனால் என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றப்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தின் உத்தேச மக்கள்தொகை இன்றைய நிலையில் சுமார் 30 லட்சம் ஆகும். என்.எல்.சி. நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் கேடுகளும், வாழ்வாதார பாதிப்புகளும், நிலப்பறிப்பு மற்றும் உழைப்புச் சுரண்டலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கின்றன. என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஓர் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.என்.எல்.சி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சாதாரணமாகத் தான் தொடங்கப்பட்டது. இப்போது ஆண்டுக்கு ரூ.11,592 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி, தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல், இராஜஸ்தான், ஒதிஷா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் முதலீடு செய்கிறது.இப்படியாக, கடலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத,  கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்.எல்.சி நிறுவனத்திற்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது; என்.எல்.சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட உழவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். அவர்களின் எதிர்பார்ப்பை தாங்கள் நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.