நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை - மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு

 
Nilagiri

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினியின் கிளை நதியான பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.  

NIlagiri

நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக கோழிக்கோடு சாலை பால்மேடு பகுதியில், மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. தமிழக, கேரளா, கர்நாடகா இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் அதனை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மழை தொடர்ந்த நிலையில் , கோழிப்பாலம், அருகே வசிக்கும் மூன்று பழங்குடியினர் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேரை, வருவாய் துறையினர், முன்னெச்சரிக்கையாக கோழிப்பாலம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.  

இதனிடையே இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.