கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்

 
NIA Covai

கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.


கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முபின் தீபாவளியையொட்டி மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதாவது, முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் தீபாவளி தினத்தன்று 3 கோவில்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இதற்காக அவர்கள் ஒத்திகை மேற்கொண்ட அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக அவர்கள், பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் "ஒற்றை ஓநாய்" தாக்குதல் முறையை பின்பற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, பயங்கரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐ.எஸ்., அல்கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை எனவும், இது வெளிநாடுகளில் பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்தது. வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதால் இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை மாநகர போலீசார் இன்றுடன் தங்களது விசாரணையை நிறைவு செய்தனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கோப்புகள், வீடியோ காட்சிகள், பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர போலீசார் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தனர். 

nia

இந்நிலையில்,  இந்த நிலையில், தமிழக போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு சென்றனர். அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.