"தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் செய்த தில்லுமுல்லு சத்தியம்" - தினகரன் விமர்சனம் !!

 
ttv

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில்  தி.மு.க அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்து வருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

neet

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் கோரி தமிழ்நாடு அரசுக்கு அவற்றை அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கூறிய மத்திய உள்துறையின் இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து சில கருத்துகள் பெறப்பட்டுள்ளன; அவற்றிற்கான தமிழக அரசின் விளக்கங்களை பெறுவதற்காக முறையே ஜூன் 21, 27 தேதிகளில் தமிழக அரசுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விஷயங்களில் கலந்தாய்வு நடைமுறை அதிக காலம் நீடிக்கும். எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலவரை கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார்.

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து தி.மு.க அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதன் பிறகும்கூட தி.மு.க அரசு இப்பிரச்னையைப் பூசி மெழுகதான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை.‘ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் அவர்களுக்கு வேண்டுமானல் மறந்து போயிருக்கலாம்; தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.