வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது - முத்தரசன் காட்டம்..

 
mutharasan

வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை  திலகர் திடல் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியவர், ஆற்றல் படைத்தவர். அவர் சொன்னது அவரின் சொந்தக் கருத்தில்லை, பெரியார் சொன்ன கருத்துக்களைவிட தமிழ்நாட்டில் வேறு யாரும் கருத்து சொல்லவில்லை. ஆனால் ஆ.ராசா  இந்து மதத்திற்கு விரோதமாக பேசினார் என்பதைப் போன்ற கருத்தை உருவாக்கி பாஜகவும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளும் தமிழகத்தில் ஒரு கலவரத்தை உண்டு செய்து வன்முறையை தூண்டும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  

ஆர்.எஸ்.எஸ்.

கடையடைப்பு ஆர்ப்பாட்டம் அவர் பதவி விலக வேண்டும் அவரை பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒருவர் கருத்து கூறுகிறார் என்றால் அந்த கருத்தை மறுக்கலாம். அந்தக் கருத்து தவறு என்றால் ஆதரவு பூர்வமாக விளக்கம் அளிக்க உரிமை உண்டு. ஆனால் கருத்து விவாதம் நடத்துவதற்கு மாறாக வன்முறையை துண்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது என்பது அனுமதிக்க முடியாத ஒன்று. நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்கின்ற வன்முறையை போல் யாரும் செய்யவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று முதல் மதச்சார்பின்மையிலும்
ஜனநாயகத்திலும் அந்த அமைப்பிற்கு நம்பிக்கை கிடையாது.

வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது  -  முத்தரசன் காட்டம்..

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் நிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையில் ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் என்ன மாதிரியான ஆவணங்கள் எடுக்கப்பட்டது என்று இதுவரை சொல்லவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறியுள்ளனர். ஏற்கனவே பல செய்திகளில் பாஜக மாவட்ட தலைவர்கள் அவர்களே அவர்களின் கார்களை கொளுத்துவது வழக்கு கொடுப்பது என பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.‌ இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறுகின்றனர். அது யார் வீசினார்கள் என்பது கண்டுபிடிப்பது தற்போதுள்ள நவீன காலத்தில் சிரமமானது இல்லை. யார் வீசினாலும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறையை யார் மேற்கொண்டாலும்‌ வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது. பாஜகவாக இருந்தாலும் எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அவர்கள் வன்முறையை ஆதரிக்கின்றனர். அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியதை நியாயப்படுத்தி அண்ணாமலை பேசினார்” என்று தெரிவித்தார்.