முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்; நீதிமன்ற வளாகத்தில் கணவனை சந்தித்த நளினி

 
murugan Rajiv gandhi

ராஜீவ்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து வெளியே வந்த முருகன், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகன்,மற்றும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த  நளினி உட்பட ஆறு பேர் கடந்த 11 தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முருகன்  திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் கடந்தாண்டு உண்ணாவிரதம் இருந்தபோது காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசியதாகவும் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி முகாமில்  இருந்து முருகன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு வேலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றம் 4ல்  ஆஜர் படுத்தப்பட்டார். விடுதலையாகி காட்பாடி உள்ள வீட்டில் தங்கி உள்ள நளினி, முருகனை சந்திக்க நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற வளாகத்தில் இருவரும் சந்தித்து பேசினர். வழக்கு விசாரணைக்கு பின்னர் இந்த மாதம் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதன்  அடிப்படையில் மீண்டும் முருகனை திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமிற்கு காவல்துறையிடம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.