பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

 
suicide

செஞ்சி அருகே பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

baby leg


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல் எடையாளம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட கடகால் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லாலு பாஷா. இவரது மகள் பெர்தோஸ்(22). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்த அப்துல்லா  (25) என்பவருக்கு பெர்தோசை திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பெர்தோஸ் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்தவருக்கு அயானா என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்து  50 நாட்களான குழந்தையுடன் கணவன் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர் திடீரென காணமல் போன பெர்தோசை, பெற்றோர்கள் தேடிய போது அருகிலிருந்த கடகால்தோப்பு பகுதியிலிருந்த பழமையான விவசாயக் கிணற்றில் குழந்தையின் பிரேதம் ஒன்று மிதப்பதாக  அப்பகுதி மக்கள் கூறியதின் பேரில் சென்று பார்த்தபோது அக்குழந்தை பெர்தோசின் குழந்தை என்பது தெரியவந்தது.

இதனிடையே தாய் பெர்தோசை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில்  செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள் குழந்தை இறந்து கிடந்த அதே கிணற்றில் தேடிய போது பெர்தோஸ் உடல் இருந்ததை கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது குறித்து செஞ்சி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.