பிரசவத்தின்போது தவறான அறுவை சிகிச்சை - தாய், குழந்தை பலி

 
Death

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தாய், குழந்தை உயிரிழந்ததாக 50க்கும் மேற்பட்டோர் ரோசணை காவல் நிலையத்தில் திரண்டு, கதறி அழுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டிவனம் அடுத்த ஏந்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சௌந்தர்ராஜன் (29). இவரது மனைவி சந்தியா(26), இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.  இவர்களுக்கு 5 வயதில் பிரகியா என்ற மகளும், 3 வயதில் சிவானி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக  கர்ப்பமான சந்தியா, பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். மேலும் கடந்த 6ஆம் தேதி அன்று, பிரசவத்திற்காக பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தை பிறக்க கடினமாக உள்ளதாக கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், பிரசவத்தின் போது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்துள்ளதாகவும், குழந்தையின் எடை அதிக அளவில் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறி சௌந்தர்ராஜனிடம் பூர்த்தி செய்யாத விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் தலையை வெளியில் இருந்து, உள்ளே தள்ளி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்பு பிரசவத்தின் போது பெண் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த குழந்தையைப் பெற்று கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 6ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரை சிகிச்சையில் இருந்த போது சந்தியாவிற்கு மயக்கம், வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மருத்துவரிடம் தெரிவித்ததால், வெளியில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி போடும்படி தெரிவித்துள்ளனர்.

இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், 10 ஆம் தேதி மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம்  முண்டையம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இரண்டு நாள் அங்கு சிகிச்சையில் இருந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் 11ஆம் தேதி மதியம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சந்தியாவிற்க்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு செப்டிக் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சந்தியாவின் கணவர் சௌந்தரராஜனிடம் கையொப்பம் பெற்று, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 13ஆம் தேதி அன்று மதியம் இதயத்துடிப்பு குறைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் சுமார் 3 மணியளவில் சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை செய்து, சரியாக மருத்துவ சிகிச்சை அளிக்காததால் நோய் தொற்று ஏற்பட்டதால் சந்தியா இறந்து விட்டதாகவும், இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அன்று மருத்துவரின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும்ம் தவறான அறுவைசிகிச்சை செய்ததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்ததாக கூறி விசிக மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் ரோசணை காவல் நிலையத்தில் திரண்டு கதறி அழுதனர். மேலும் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.