"ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி..!" ஏழைகளை பற்றி கவலைப்படுவதில்லை - ராகுல் காந்தி தாக்கு..

 
rahul gandhi

தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ராகுல் காந்தி, “  ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும்போதும் உற்சாகத்தோடும்,  மன நிறைவோடும்,  மகிழ்ச்சியோடும் நான் தமிழ்நாட்டிலிருந்து செல்வேன்.  3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் நாட்டுக்கான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி.  தேசியக்கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல.  இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாளம் இந்தக்கொடி.

வீறுநடை போட்டு  ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் மொழி, கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான உரிமையை தேசியக்கொடி வழங்குகிறது. இன்று இந்தியாவிலேயே இருக்கிற ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இயக்கங்களால் அச்சுறுத்தப்படுகிறது. தேசியக்கொடி அவர்களது தனிப்பட்ட உரிமை என்று நினைக்கிறார்கள். நாட்டிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் ஒட்டு மொத்த உருவம் தான் இந்தியா. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்;  இந்திய மக்கள் ஒரு நாளும் பயப்பட மாட்டோம்.

 ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம்  -  தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

இதுபோன்ற விசாரணைகளால் எங்களை முடக்கவோ பயமுறுத்தவோ முடியாது.   இந்தியாவில் உள்ள எந்த எதிர்க்கட்சி தலைவர்களும் உங்கள் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டார்கள்.  பாஜக இந்த நாட்டை மதம் மற்றும் மொழி வாயிலாக பிரித்துவிடலாம் என்று நினைக்கிறது.  ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது.   இன்று இந்தியா வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒரு பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.  ஆனால்   ஊடக நண்பர்கள் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள். பாஜக திட்டமிட்டு விவசாயிகளை, கூலி தொழிலாளிகளை,  ஏழைகளை நசுக்கி வருகிறது. சில குறிப்பிட்ட பெரும் பணக்காரர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

 "ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி..!" ஏழைகளை பற்றி கவலைப்படுவதில்லை - ராகுல் காந்தி

துறைமுகங்கள்,  விமான நிலையங்கள் , நிலக்கரி சுரங்கங்கள் , மின்சார உற்பத்தி,  தொலைத்தொடர்பு என அனைத்தும் இந்த தொழிலதிபர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லாமல் நம்முடைய பிரதமரால் ஒரு நாள் கூட அரசியல் ரீதியாக இருக்க முடியாது.  இந்த தொழிலதிபர்களுக்கு வேண்டிய திட்டங்களை மட்டுமே செயல்படுத்துவதையே  நமது பிரதமர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை,  ஜிஎஸ்டி வரி , வேளாண் சட்டங்களை அறிவித்தது என அனைத்துமே இந்த சில தொழில் அதிபர்களுக்காக  செய்யப்பட்டவையே. ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு என்ன நோக்கம் இருந்ததோ அதேதான் மோடி அரசிடமும் இருக்கிறது” என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.