மோடி போஸ்டர் மீது சாணி அடித்த பெண்! போராட்டத்தில் குதித்த பாஜகவினர்

 
மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு தாம்பரம், முல்லை நகர் பகுதியில் உள்ள புது தாங்கள் ஏரியில் நேற்று  மாலை தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மை பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தாம்பரம் நகர பாஜ தலைவர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

காமன்வெல்த்: பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து- Dinamani

இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், நிர்மல் குமார், செங்கல்பட்டு மாவட்டம் பாஜ தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக முல்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதி முழுவதும் தாம்பரம் நகர பாஜ சார்பில் ஏராளமான போஸ்டர்கள் ஓட்டப்பட்டு, ஆங்காங்கே கட்சிக் கொடிகள், அலங்கார விளக்குகள் என அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முல்லை நகர் பிரதான சாலையில் ஒட்டப்பட்டு இருந்த பாஜ போஸ்டரில் இந்திய பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களில் மர்ம நபர்கள் சாணி அடித்திருந்தனர். இதனை கண்ட 50க்கும் மேற்பட்ட பாஜவினர் தாம்பரம் நகர தலைவர் கணேஷ் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி முல்லை நகர் பிரதான சாலையில் ஊர்வலமாக நடந்து சென்று தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் உத்தரவின் படி, ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பாஜகவினரை சமாதானப்படுத்தி அங்கு இருந்து கலைய செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் பாஜக போஸ்டர் மீது சாணி அடித்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மீது தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவினரின் திடீர் சாலை மறியலால் தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.