இன்று இரவுக்குள் சீர்காழியில் மின் விநியோகம் சீர்செய்யப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

 
senthil balaji

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழியில் இன்று இரவுக்குள் மின் விநியோகம் சீர்செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், இடைவிடாது பெய்து வரும் அதி கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது மட்டுமின்றி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு அங்கு ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ள நிலையில், பயிர்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. 

ministers

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:- சீர்காழி ஒரு சில பகுதிகளில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள்,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.