அமைச்சர்கள், அதிகாரிகள் ஒரே நேர்க்கோட்டில் செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..

 
stalin

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு  அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மழைநீர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில்  பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கியதாக  தகவல் வெளியாகியுள்ளது. மழைநீர் வடிகால், சாலை புனரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்தும், அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்தும்  அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  சில துறைகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமல் இருப்பதாக அறிகிறேன் என்றும்,   இது எங்கும் எப்போதும், எந்த துறையிலும், எந்த சூழலிலும் ஏற்பட கூடாது என்றும் கூறினார்.  

 அமைச்சர்கள், அதிகாரிகள் ஒரே நேர்க்கோட்டில் செயல்பட வேண்டும்  - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..

மேலும்,  அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர்,  அவ்வாறு செயல்பட்டால் நம்பர் ஒன் இலக்கை நிச்சயமாக அடைய முடியும்  என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  2022- 23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் நிலை குறித்தும், அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது?  என்றும் ,  திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் எத்தனை? என்பது  குறித்தும்  விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அதேபோல்,  துறைவாரியான திட்ட பணிகள் மற்றும் வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  அத்துடன்  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்   அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர்,  பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.