சென்னையில் மின்விநியோகம் பாதிப்பா? வாய்ப்பே இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji

சென்னை மாநகரில் 100% மின்விநியோகம் சீராகவும், நாளொன்றிற்கு 2000 மின் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவதாகவும்,  பருவமழை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தற்பொழுது மின் தடை இல்லையென்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Job scam: Madras High Court orders fresh probe against TN minister V Senthil  Balaji- The New Indian Express

சென்னை கலைஞர் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், பி.டி. ராஜன் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் இந்த துணைமின் நிலையில் மழைக்கால முன் ஏற்பாடுகள், மின் பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர உள்ளதா என்பதை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, மின்சார வாரிய தலைவர்  ராஜேஷ் லக்கானி ஆகியோருடன் இணைந்து பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, மின்சாரதுறை சார்பில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து, இந்த ஆண்டு அந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத அளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில்  10 துணை மின் நிலையங்களில் 16 மின்மாற்றிகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல பில்லர் பாக்ஸ்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழைநீர் சூழ்ந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட சூழலை இந்த ஆண்டு சரிசெய்யும் வகையில் 2, 700 பில்லர் பாக்ஸ்களும் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

மழைகாலத்தை பொறுத்தவரை சென்னை மாநகரில் பகல் நேரங்களில் 1440 பேரும், இரவு நேரங்களில் 600 மின் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  சென்னையை பொறுத்தவரை 1, 800 பீடர்கள் உள்ளன. அவற்றில் எங்குமே மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. 100% மின் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று இரவு 2 இடங்களில் மட்டும் மின்விநியோகம் தடைபட்டது. அங்கும் 10 நிமிடங்களில் சரிசெய்தாகிவிட்டது.  மழைக்காலத்தை எதிர்கொள்ள 18, 350 மின் மாற்றிகள், 5 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு மின்கடத்திகள், 2 லட்சம் மின் கம்பங்கள் இருப்பில் உள்ளன. எனவே தமிழகத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது. மழைக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 31 ஆயிரத்து 500 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு உள்ளன. மின் கம்பிகளை பொருத்த அளவில் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளன. 

சென்னை மட்டுமின்றி மழை பெய்யக்கூடிய மற்ற மாவட்டங்களாக இருந்தாலும், கடலோர மாவட்டங்களாக இருந்தாலும் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதிப்பும் இல்லை. எந்த பாதிப்பு இருந்தாலும் மின்னகம் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம்.  ஆனால் இதுவரை மின்தடை தொடர்பாக பெரிய அளவில் அழைப்புகள் வரவில்லை. அதுவே மின் விநியோகம் சீராக உள்ளதற்கு சான்று. இருப்பினும் மின்னகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்கும் பணியில் 60 பேர் இருந்த நிலையில், தற்போது 75 பேராக உயர்த்தி உள்ளோம். மின் தேவைக்கு ஏற்ப விநியோகமும் சீராக உள்ளது. நேற்று 13,170 மெகாவாட் அளவுக்கு தேவை இருந்தது. வழக்கமாக 14,500 முதல் 16 ஆயிரம் மெகாவாட் வரை மின்தேவை இருக்கும். தற்போது மழைக்காலம் என்பதால் குறைந்துள்ளது”எனக் கூறினார்.