காந்தி மண்டபத்தில் புதிதாக கட்டபொம்மன், மருது பாண்டியன் சிலைகள்

 
samynathan

சென்னை காந்தி மண்டபத்தில்  தலைவர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் அரங்கம் மற்றும் சிலைகளுக்கான அருங்காட்சியக பணிகள், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முழுவதுமாக நிறைவடைந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அருங்காட்சியகப் பணிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் சிலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன்  நேரில் பார்வையிட்டு, ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், “மறைந்த  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் மக்களுக்காக பணியாற்றிய தலைவர்களுக்கும் தனி அரங்கங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்ததன் அடிப்படையில், அதற்கான பணிகள் முழு வீச்சீல் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுபோன்று பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.5 கோடி 51 லட்சம் மதிப்பீட்டில் காந்தி மண்டபத்தில் சிலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற்னா. திராவிட இயக்க முன்னோடி அயோத்திதாஸருக்கு  திருவுருவ சிலை அமைக்க இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் பெரிய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை உருவாக்கும் பணி 98% முடிந்துள்ளது. மருது பாண்டியன் சிலை அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளன. பணிகளை விரைவாக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,  ஃபிப்ரவரி மாத இறுதிக்குள், அவற்றை பொதுமக்கள் பார்வைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார்” எனக் கூறினார்.