தவறை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

 
ma Subramanian

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனக்கு பரிசாக வந்த 5,191 புத்தகங்களை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளி நூலகங்களுக்கு வழங்கினார்.

இந்த புத்தகங்களை மாநகராட்சி மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், நிலைக்குழுத்தலைவர் தனசேகர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் திராவிடக் கழகங்களின் சிந்தனைகள் குறித்த புத்தகங்கள் சங்க இலக்கியங்களும் விளக்க உரை புத்தகங்கள் பொது அறிவு புத்தகங்கள் என 5,191 புத்தகங்கள் அடங்கும். 

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முதலமைச்சர், திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றபோது ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்கள்.  சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை தவிர்த்து எனக்கு புத்தகங்களை பரிசாக அளியுங்கள். அந்த புத்தகங்களை எல்லாம் அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதே நூலகங்களுக்கு கொடுத்தார்கள், அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனையெடுத்து திமுக அரசு அமைந்த பின் அமைச்சர் பொறுப்பேற்ற பின் எனக்கு செல்லும் இடங்களில் கிடைத்த புத்தங்கள் வந்தன. இந்த புத்தகம் விழுப்புரத்தில் உள்ள கிராமத்திற்கு 4,000 முதல் 5,000  புத்தகம் அளித்தேன். இப்போது சென்னை மாநகராட்சியிலுள்ள பள்ளிகளுக்கு 5,191 புத்தகங்களை அளிக்கிறோம்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த நூல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் 11,139 அரசு மருத்துவமனைகள்  செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலே அதிக அரசு மருத்துவமனை உள்ள மாநிலமும், அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழகம் தான். ஒரு நாளைக்கு ஆறு லட்சம் பேர் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். ஒரு விரும்பத் தகாத சம்பவம் நடந்துவிட்டது. அந்த ஒரு நிகழ்வை காரணம் காட்டி,  ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும், தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.