ஏழை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்வு - அமைச்சர் செந்தில்பாலாஜி

 
senthil balaji

ஏழை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ,  அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று  அறிவித்தார்.  இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி நேற்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

senthil balaji

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு எந்த கட்டணமும் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம் 3217 கோடி ரூபாயினை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது.  விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த மின் கட்டணம் தமிழகத்தில் தான் அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.