சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை - அமைச்சர் தகவல்

 
sekar babu

சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை தொடங்கப்படும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் தத்தளித்த இடங்களில் 80%க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை. தற்போது மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு பெருமழையில் மக்களை பாதிப்பில் இருந்து முதல்-அமைச்சர் காப்பாற்றியுள்ளார் . அதனால் அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சென்னையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்மோட்டார்கள் வரவழைக்கப்படும். நவ.9ம் தேதிக்கு பிறகு பெருமழை பெய்தால் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

sekar babu

மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் வீணாவதை தடுக்க சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நீரை சேமிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை முழுவதும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.