தேர் விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - சேகர்பாபு

 
sekar babu

புதுக்கோட்டை தேர் விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட  நிலையில் தேர் பவனி  தொடங்கிய சில மணி நேரத்தில் தேரின் முன் பக்கம் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.  இதனால் அங்கிருந்த பொது மக்கள் அங்கிருந்து அலறியடித்து  ஓடினர்.  இருப்பினும் தேருக்கு அருகில் நின்று இருந்தால் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், காயமடைந்தவர்களை  மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாக நிலையில் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தேரை வழிநடத்திய திருகோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். 

pudukottai

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: புதுகோட்டை கோயில் தேர் விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளனர். ஒருவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 809 திருக்கோயில்களில் 981 தேர்கள் உள்ளன, எல்லா தேரோட்டத்திலும் விபத்து ஏற்படுவதில்லை. சில தேர் விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.  

எதிர்காலங்களில் விபத்துக்களை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தேர் விபத்து நடைபெறாமல் இருக்க இந்து சமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை தேரோட்டத்திற்கு அனைத்து துறைகள் சார்பிலும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து யார் அலட்சியம் காரணமாக நடைபெற்றிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார். புகாரின் அடிப்படையில் கோயில் ஊரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கவனக்குறைவால் விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு தேரில் இருந்து சிலைகள் கோயிலுக்குள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.