கனமழையை எதிர்கொள்ள தமிழக வருவாய்த்துறை தயார் - அமைச்சர் தகவல்

 
KKSSR

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.ஜூன் 1 முதல் நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் 24.2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பான மழை அளவை விட, 94 சதவீதம் கூடுதல்.கடந்த 24 மணி நேரத்தில், 32 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக, 3.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அதி கன மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில், உபகரணங்களுடன் பல்துறை மண்டலக் குழுக்கள் மற்றும் மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து, பாதிப்புகளை தவிர்க்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.