இலவச பேருந்து பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர் - அமைச்சர் தகவல்

 
Sivasankar

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயனடைந்து வருவதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூர் தாஜ்வெஸ்டட் உணவு விடுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது.  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன்  சாலை விபத்துக்களை குறைக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.53 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது. 

bus conductor

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களில் 164 கோடி மகளிர் அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர். தினமும் 35 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இலவச பேருந்து மூலம் பயன் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அறிவித்து உள்ளார். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.