2 குழந்தைகள் போதும்; அதன்பின் குடும்ப கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சை செய்துகொள்ளுங்கள்- அமைச்சர் பொன்முடி

 
Ponmudi

அளவோடு பெற்று வளமோடு வாழ இல்லற வாழ்க்கைக்கு இரண்டு குழந்தைகள் போதும் அதன் பின்னர் மனைவி அல்லது கணவர் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என அமைச்சர் க.பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்!' - அமைச்சர் பொன்முடி| Arrear  exams will be held online - Minister Ponmudi!

விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. விழுப்புரம் ஆனந்தா திருமண மஹாலில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்து, 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “வசதி, வாய்ப்பு குறைவால் வளைகாப்பு விழாவை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்காக, சமுதாய வளைகாப்பு விழா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 12,176 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், இனிப்புகள் மற்றும் பலவகை சாதங்கள் வழங்கப்படுகின்றன. வீட்டிலேயே குழந்தை பெற்ற காலம்மாறி, இன்றைக்கு அரசு மருத்துவமனைகளில் குழந்தைபெறும் நிலை உருவாகியுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, பதிவு செய்த கர்ப்பிணிகள் 90 சதவீத பேருக்கு அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவ வசதிகள், மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்ற இந்த காலத்தில், கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு ரூ.18 ஆயிரம் வழங்கி வருகிறது. எனவே, அளவோடு பெற்று வளமோடு வாழ்வதற்கு, இல்லற வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு, இரண்டு குழந்தைகள் போதும் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு பிறகு மனைவி மட்டும் தான் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள என்பதில்லை கணவர்களும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.