அனைத்து தொகுதிகளிலும் விரைவில் அரசு கலை கல்லூரி - அமைச்சர் பொன்முடி தகவல்

 
Ponmudi

தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரி இல்லாத சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் கல்லூரி தொடங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இன்று 5வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநார் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். இதனிடையே கேள்வி நேரத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படுமா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசினார். அதாவது, அரசு கலைக் கல்லூரி இல்லாத தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.