”ஆக்கிரமிப்புகளை அகற்றி அண்ணா சாலை உள்ளிட்ட 10 முக்கிய சாலைகள் விரைவில் அகலப்படுத்தப்படும்”

 
minister sakkarapani

சென்னையில் செயல்படுத்தப்படவுள்ள மூன்றாம் முழுமை திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக தடுக்க முடியும் என்றும் சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட 10 முக்கிய சாலைகளை அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ளதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.  

Housing Minister refutes Annamalai's allegations - The Hindu

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை மாநகர வளர்ச்சிக்கான மூன்றாம் முழுமை திட்டத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியாத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரண்டாவது முழுமை திட்டம் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், 2027 முதல் 2046-ஆம் ஆண்டு வரையிலான சென்னை மாநகர வளர்ச்சியின் மூன்றாம் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் குறித்து பயிலரங்கில் ஆராயப்பட்டது.

நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “திமுக ஆட்சியில் 2-வது முழுமை திட்டம் துவங்கப்பட்டு, தற்போது மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அந்த வகையில் அரசு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சென்னை சுற்றுப்புறத்தில் உள்ள நீர் நிலைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அந்த பகுதிகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் செய்திட வேண்டும்” எனக் கூறினார். 

பின்னர் பேசிய வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, “அரசால் எடுக்கப்படும் தொலை நோக்குத் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்பது மிகவும் முக்கியம். மூன்றாம் முழுமை திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக தடுக்க முடியும். சென்னையில் அண்ணா சாலை உள்ளிட்ட 10 முக்கிய சாலைகளை அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. மூன்றாம் முழுமை திட்டம் குறித்து தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சென்னை மாநகராட்சியில் செய்யப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அரசிடம் நேரடியாகவே கருத்துகளை தெரிவிக்கலாம். மூன்றாம் முழுமை திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும். 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயன் பெறக்கூடிய திட்டங்கள் தற்போது மூன்றாம் முழுமை திட்டம் மூலம்   துவங்கப்படவுள்ளது. மழை நீர் தேங்குவதை முழுமையாக தடுக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.