மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூட சொல்லவில்லை - அமைச்சர் குற்றச்சாட்டு

 
meyyanathan and modi

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த நிமிடம் வரை பிரதமர் மோடி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. சீர்காழியில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளியில் பெய்த 44 செண்டி மீட்டர் மழையால், சீர்காழி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில்,  சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார் 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ; இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிமிடம் வரை பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. அதே சூழலில் இந்த பாதிப்பு மற்ற வட மாநிலங்களில் ஏற்பட்டு இருந்தால் பிரதமர் அவர்கள் உடனடியாக பார்வையிட்டு அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பார். அப்படி எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கீடும் இதுவரை செய்யாத நிலையில் அண்ணாமலை உன்மைக்குப் புறமாகப் பேசி வருகிறார். இவ்வாறு கூறினார்.