செஸ் ஒலிம்பியாட் - அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறையா?

 
tasmac

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கும் புறக்கணிக்கவில்லை, போட்டியை தொடங்கி வைப்பதே அவர் தான் என பாஜகவின் குற்றச்சாட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் விளக்கமளித்துள்ளார்.

Minister Meyyanathan

சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 தேதி பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் துவக்கி வைக்கின்றனர். இந்நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இறுதிகட்ட பணிகள் குறித்து விளையாடுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம், தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் 100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நடத்த முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. சிறுவர்களுக்கு கூட செஸ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இதுவரை 187 நாடுகளில் 68 நாடுகளை சேர்ந்த வீரர்கள் முழுமையாக சென்னை வந்தடைந்துள்ளனர். வீரர்களை தமிழக பாரம்பரியப்படி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மதுபான கடைகளும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அதற்கு அவசியமில்லை. முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாக இந்தியாவை சேர்ந்த நடுவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் படம் எங்கும் புறக்கணிக்கவில்லை, போட்டியை தொடங்கி வைப்பதே பிரதமர் தான்” என தெரிவித்தார்.