உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதல் இடம்- அமைச்சர் மா.சு

 
masu

அடுத்த வருடத்திற்குள் உடல் உறுப்பு பெறுவதற்காக காத்திருப்பவரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Ma Subramanian launches 'Manam' scheme for college students

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்னை மற்றும் வேலம்மாள் மருத்துவமனை மதுரை ஆகிய மருத்துவமனைகளில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் அதிக உறுப்பு கொடையாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய மருத்துவமனையாக ரேலா மருத்துவமனை தேர்வுசெய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகளாக ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மதுரை, வேலூர் கிறித்துவ கல்லூரி, கோவை மெடிக்கல் சென்டர் ஆகிய மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை,வேலம்மாள் மருத்துவமனை மதுரை ஆகிய மருத்துவமனைகளுக்குசான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்திய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. உடல் உறுப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும் கூட உறுப்பு தானத்திற்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் 1,559 உறுப்பு கொடையாளர்கள் என்பது இந்திய அளவில் மிக பெரிய அளவிலான எண்ணிக்கை. 1,559 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து 5,687 உறுப்புகள் எடுக்கப்பட்டு பயன் பெற்றுள்ளது. 3,629 பேருக்கு திசுக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் 6,386 பேர் சிறுநீரக உறுப்பு வேண்டியும்,346 பேர் ஈரல் வேண்டியும், 37 பேர் இதயம் வேண்டியும், 51 பேர் நுரையீரல் வேண்டியும், 18 பேர் இதயம் மற்றும் நுரையீரல் வேண்டியும் ,2 பேர் கணையம் வேண்டியும் ,23 பேர்கைகள் வேண்டியும் காத்திருக்கின்றனர். அடுத்த வருடத்திற்குள் உடல் உறுப்புக்களுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்யம் என்ற நிலையை உருவாக்க எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.