தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 
ma subramanian

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் 3 பேருக்கும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Ma Subramanian

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் குரங்கம்மை நோய் பரிசோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வகத்தில் குரங்கம்மை நோய் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறினார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.