தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 
Ma Subramanian

தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர்.

ma Subramanian

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணம், இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 540 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை அறை முன்பு, 'செக் லிஸ்ட் போர்டுகளை' வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவத் தவறுகள் குறையும். விரைவில், 1,649 அறுவை சிகிச்சை அரங்கு முன்பு செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்ற ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல்முறை. தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன. 

அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.