தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழகத்திற்கு வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகள் வெளியாகியுள்ள அவர்களில் யாருக்கும் குரங்கம்மை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்துள்ளார்.   கேரளாவில் 2 பேருக்கும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவரும் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: 
தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு குழந்தைகள், திருச்சி, கன்னியாகுமரியை சேர்ந்தவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குரங்கு அம்மை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இனிவரும் காலங்களில் சென்னை கிங் மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை நடத்தப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.